Kart – Theory

இராசேந்திர சோழன்

Posted in Chola by Karthikeyan Sivanantham on October 1, 2018

சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவருமான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமாவார்.

சோழத்தின் தலைச்சிறந்த நாயகனாம் ராஜராஜ சோழருக்கும் கொடும்பாளூர் கோமகள் வானதிக்கும் மகனாய் ஆடித் திருவாதிரை நன்னாளில் அவதரித்தவர். அவரின் திருநட்சத்திரம் ஆடித்திருவாதிரை.

விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராசேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது.

சோழ மன்னர்களில் இராசேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவர்.

சோழ குலம் அதற்கு முன் கண்டிராத ஒப்பற்ற வீரர். தந்தை சொல் தட்டாத தனயன்.

வேங்கையின் மைந்தன். எதிரிகள் சொப்பனத்தில் கண்டு அஞ்சும் சிங்கம்.

கங்கையும் கடாரமும் கொண்ட மாவீரர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சோழநாடு ஆனது இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் – மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது.

இராசேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவார். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவர்.

மேலும் கங்கை வரை போரிட்டு சென்று கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய நகரத்தை உருவாக்கி திறம்பட ஆட்சி செய்தவர். அதே போல் கங்கை கொண்ட சோழீசர் ஆலயத்தையும் நிர்மாணித்தவர்.

தனது தந்தை உடையார் ஶ்ரீ ராஜராஜ தேவர் தஞ்சையில் கட்டிய பெரிய கோவில் போன்றே கங்கைகொண்ட சோழபுரத்திலும் ஓர் கோவிலை உருவாக்கியவர்.

தந்தையின் சாதனையை தான் மிஞ்சிவிட்டதாக சரித்திரம் பேசிவிட கூடாது என்பதற்காக அக்கோவிலை தஞ்சை பெரிய கோவிலை விட சிறியதாக கட்டிய ஒப்பற்ற சரித்திர நாயகர்.

கங்கை வெற்றிக்கு பின் சோழ தலைநகரை தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றியவர்.

அக்கோவிலை உருவாக்கிய தலைமை சிற்பி, சண்டேசுவர நாயனாருக்கு சிவபெருமான் அருள் புரியும் சிற்பத்தில் சண்டேசுவர நாயனாராக இராசேந்திரரை உருவகப்படுத்தி சிற்பம் செதுக்கியுள்ளார்.

சோழகங்கம் என்ற ஏரியையும் கங்கைகொண்ட சோழபுரத்தில் உருவாக்கியவர்.

உலகின் முதல் கப்பற்படையை உருவாக்கிய சாதனை நாயகர்.

ஒப்பற்ற மன்னர் தான் கண்ட போர் அனைத்திலும் வெற்றி கொண்ட வெற்றி வீரர்.

அலைகடல் மேலே பல கலம் செலுத்தி சோழ சாம்ராஜ்ஜியத்தை நிலைநிறுத்திய சோழ தாயின் தவப்புதல்வர் இராசேந்திர சோழர்!

 

 

இராஜராஜீஸ்வரமுடைய பரமசுவாமி

Posted in Chola by Karthikeyan Sivanantham on October 1, 2018

இராஜராஜீஸ்வரமுடைய பரமசுவாமி” , இது தஞ்சை பிரஹாதேஸ்வரா கோயில்[பெரிய கோவிலின்] உண்மையான பெயர்.

1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வட இந்தியாவை நோக்கி படை எடுக்காமல், மிகப் பெரிய ஆலயம் கட்டினான்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்…

ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் தான் (985–1014) தமிழ் வரலாற்றின் பொற்காலம்.
பொருளாதாரம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, வணிகம், நாகரிகம், விவசாயம், கலாச்சாரம், உணவு முறை, போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது.

தென் இந்தியா முழுவதையும் தன் குடைக் கீழ் கொண்டு வந்த சோழனுக்கு தன் நாட்டின்
வளர்ச்சியையும் ,நாகரிகத்தையும் காலத்தால் அசைக்க முடியாத படி வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை.

அந்த ஆசையின் முழு வடிவமே இன்று உலகம் வியக்கும் கிரானைட் கற்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில்.இந்த பதிவு கோவில் கட்டப் பட்ட தொழில்நுட்பத்தை பற்றியது அல்ல.அதை விட மிக கடினமான மற்ற துறைகளை பற்றியது.

  • தஞ்சை பெரிய கோவில் தன் காலத்தில் இருந்த மற்ற கோவில்களை விட 40 மடங்கு பெரிய கோவில்.
  • கோவில் கட்டுமானத்தில் மரம் இல்லை.
  • சுடு செங்கல் இல்லை.பூராங்கல் இல்லை.
  • மொத்தமும் நீலம் ஓடிய,சிவப்பு படர்ந்த உயர்ந்த கிரானைட் கற்கள் மட்டுமே .
    சிற்பங்கள் மற்றும் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் உட்பட அனைத்திலும் கிரானைட் கற்கள்தான்.

1,30,000 டன் எடை உள்ள கற்களை கொண்டு கோவில் எழுப்ப வேண்டும் என்றால் கோவில் அஸ்திவாரம் எந்த அளவுக்கு பலமாக இருக்க வேண்டும்.
அதேபோல் கர்ப்ப கிரகத்துக்கு மேல் 216 அடி கூர்நுனி வெற்று விமானம் (HollowTower , அதாங்க கர்ப்பக்கிரகத்துல இருந்து பார்த்தா விமானம் உச்சி தெரியும்) .விமானத்தின் உச்சியில் 80 டன்.
அதிகமாக இல்லைங்க.வெறும் 72574.779 கிலோதாங்க. இதிலுள்ள கலசத்தை ஏற்ற வேண்டும்.இது போக விமானத்தின் மேல் 8 நந்தி சிலைகள் வேறு. கட்டிடக்கலையின் உச்சபட்ச அறிவு இல்லாமல் இது சாத்தியம் ஆயிருக்குமா!!!.

1000 வருடங்களுக்கு முன் தஞ்சை கோவில் கட்டும் போது அது தான் இந்தியாவின் மிகப் பெரிய விமானம் கொண்ட கோவில். விமானம் முழுக்க கிரானைட் கற்களை சிற்பமாக செதுக்க வேண்டும்,மேற்கூறிய 80 டன் கலசத்தை வேறு ஏற்ற வேண்டும் என்றால் மிக பெரிய சாரத்தை கோவில் விமானம் சுற்றி கட்ட கட்டிடக் கலை நிபுணர்கள் எவ்வளவு துல்லியமாக ஆராய்ந்து இருப்பார்கள். இது போக எவ்வளவு கயிறு,மரக் கட்டை வேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டும் .
இவை அனைத்திற்கும் சிறந்த கணித அறிவு நிச்சயம் தேவைபட்டு இருக்கும்.

தஞ்சை பெரிய கோவிலை கட்ட 7 வருடம் ஆனது என்று வரலாறு சொல்கிறது.கோவிலை ஒரு லட்சத்திற்குக்கும் மேற்பட்ட கைதிகளின் உதவியுடன் தான் கட்டி உள்ளனர். கைதிகள் மட்டும் இல்லை மக்களின் உதவியும் கூட.

கைதிகளை வைத்து தானே கட்டினார்கள் என்று ஏளனமாக நினைக்க வேண்டாம். சற்று யோசித்து பாருங்கள்.இன்றைய நிலமையில் டெல்லி நகரில் ஒரு லட்சம் பாகிஸ்தான் கைதிகளை வைத்து ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால், நம் மிலிட்டரி எவ்வளவு கட்டுகோப்பாக இருக்க வேண்டும். நம் பாதுகாப்பு எவ்வளவு நேர்த்தியாக இருக்கவேண்டும்!.ஒரு நிமிடம் அசந்தாலும் நாட்டின் தலைநகரம் வரைபடத்தில் இருந்து காணாமல் போய் விடும். எந்த நேரம் வேண்டுமானாலும் கைதிகள் கலவரத்தில் ஈடுபடலாம்.
தற்கொலை தாக்குதல் நடத்தலாம். எந்த அளவுக்கு சோழ காவல் படை செயல்பட்டு இருந்தால் 7 வருடமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரம எதிரி நாட்டு கைதிகளை வைத்து தஞ்சை தலைநகரில் வேலை வாங்கி இருப்பார்கள்!.

7 வருடம் கைதிகளை அடக்கி ஒடுக்கி வேலை வாங்குவது சாத்தியம் இல்லை.அதே போல் மற்ற கட்டிடக் கலை வல்லுனர்களும் மனம் கோணாமல் வேலை செய்ய வேண்டும்.மக்களிடம் இருந்தும் எதிர்ப்பு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் HRM எனப்படும் மனித வள மேலாண்மையை மிக நேர்த்தியாக நடைமுறை படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு ஓங்கி உயர்த்து நிற்க்கும் கோவில் தான் நமக்கு சாட்சி.

சரி, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகள், ஆயிரம் ஆயிரம் யானைகள், குதிரைகள், 1000க்கும் மேற்பட்ட சிற்பிகள், ஓவியர்கள்,
ஆசாரிகள், கொல்லர்கள், நடன கலைஞர்கள் ,சமையல் வேலையாட்கள்,கற்களை பிளக்கும் வீரர்கள் என ஒரு மாபெரும் படைக்கும் 7 வருடம் உணவு வழங்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக 7 வருடம் சோழ தேசத்தில் விவசாயம் மற்றும் பொருளாதாரம் தங்கு தடை இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஒரு முழு படைக்கும் தேவையான மருத்துவ வசதியும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.

இது மட்டுமா?!…

7 வருடம் கோவில் கட்ட தேவையான பொருட் செலவை ஈடு கட்ட தொடர்ச்சியாக போர்களும் நடந்து இருக்க வேண்டும்.வெற்றியும் அடைந்து இருக்க வேண்டும் .அதே நேரத்தில் எதிரிநாட்டு படையெடுப்பையும் தடுத்து இருக்க வேண்டும்.

ஒரு வேளை ராஜராஜ சோழனோ, இல்லை மற்ற மூத்த கட்டிடக் கலை நிபுணர்கள் இறந்தாலும் கோவில் வேலை தடை இல்லாமல் தொடர சுமார் 1000 வரை படங்களை தயார் செய்து இருக்கிறார்கள்.

கிரானைட் கற்களை செதுக்க என்ன வகை உளி, இரும்பு பயன் படுத்த வேண்டும் என்று முன்பே கொல்லர்கள் ஆராய்ச்சி செய்து இருக்க வேண்டும். அதே போல் கற்களை நெம்பி தூக்க உதவும் கம்பிகளை தயார் செய்ய வேண்டும் என்றால் பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தியும் தெரிந்திருக்க வேண்டும்.

தஞ்சையை சுற்றி 50 கிலோ மீட்டருக்கு கிரானைட் கற்கள் கிடையாது. கோவில் கட்ட தேவையான கற்களை திருச்சிக்கு சற்று தெற்கே 50 கி.மீ தூரத்தில் உள்ள நார்த்தா மலையில் இருந்து கொண்டு வர வேண்டும் என்றால் சோழ தேசத்தின் சாலைகள் மற்றும் போக்குவரத்தும் மிக மிக தரமாகவும் சீராகவும் இருந்திருக்க வேண்டும்.

இது எல்லாவற்றையும் சமாளித்தலும் மிக பெரிய பூதம் ஒன்று உள்ளதே, அது தான் அரசியல். எந்த ஒரு சாம்ராஜ்யமாக இருந்தாலும் அரசியல் குழப்பம் இருக்காமல் இருக்காது. 7 வருடம் அரசியல் குழப்பம் எதுவும் நடக்காமல் மிக நேர்த்தியாக ஆட்சி செய்திருக்க வேண்டும்.சோழ அரசியலில் பெண்களின் பங்கு கவனிக்கத்தக்கது.ஆண்மகன்கள் கோவில் வேலையில் மும்முரமாக இருக்க பெண்கள்
( அதிகாரிச்சி ) அரசு இயந்திரத்தை திறன்பட இயக்கியுள்ளனர் என்று வரலாறு சொல்கிறது.

1000 வருடம் 6 நில நடுக்கத்தை கண்டும் அசராமல் நிற்கும் தஞ்சை பெரிய கோவில் வெறும் கோயில் இல்லை.

மருத்துவம், பொருளாதாரம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, வணிகம்,நாகரிகம், விவசாயம்,
கலாச்சாரம், உணவு முறை, போர்ப்படை என்று அனைத்திலும் மிக மிக சிறந்து விளங்கிய நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் எடுத்துக்காட்டு.

தஞ்சை பெரிய கோவில் என்கின்ற மாபெரும் பொக்கிஷத்தை நமக்கு தந்த அருள்மொழி வர்மன் எனும் ராஜராஜ சோழனின் பெருமையை உலகம் முழுக்க பெருமையோடு பரப்புவோம்.

வாழ்க நின் புகழ்…
மண்டி இட்டு தலை வணங்குகிறோம்.

தக்கோலம் போர்- இராஜாதித்த சோழன் மரணம்

Posted in Chola by Karthikeyan Sivanantham on October 1, 2018

இராஜாதித்தர் என்பவர் இராஜாராஜ சோழனின் பெரிய பாட்டனாரும், பராந்தக சோழனின் மகனும் ஆவார். இவரே யானை மேல் துஞ்சிய தேவன் என்று அழைக்கப்படுபவர் .
தக்கோலம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது இராஜாதித்தன் மற்றும் தக்கோலத்தில் நடந்த மாபெரும் போர் ஆகும். இராஜாதித்தன் தக்கோலப் போரில், கங்க மன்னன் பூதுகனால் கொல்லப்பட்டான் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை பற்றி இக்கட்டுரையில் நான் படித்த புத்தகம் மற்றும் கல்வெட்டு வாயிலாக இராஜாதித்தனின் மரணம், தக்கோல போர் உருவான சூழல் மற்றும் அதன் முற்கால பின்னணியை பற்றி விரிவாக காண்போம்.

முதலில் இராஜாதித்தரின் பாட்டனார் முதலாம் ஆதித்தன் காலத்தில் நடந்த அரசியலில் இருந்து பார்ப்போம்.

1. முதலாம் ஆதித்தன் தனது இராஷ்டிரகூட நண்பன் இரண்டாம் கிருஷ்ணன் என்பவன் தனக்கு பல போர்களில் உதவி செய்ததின் பொருட்டு அவரது புதல்வி இளங்கோபிச்சுவை மணமுடித்து பட்டத்தரசி ஆக்கினான். இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைக்கு தன் நண்பன் மற்றும் மாமனான இரண்டம் கிருஷ்ணனின் மற்றொரு பெயரான கன்னர தேவன் என்ற பெயரை சூட்டினர். ஆதித்த சோழனின் மற்றொரு மனைவியான திரிபுவனமாதேவிக்கு பிறந்தவர் பராந்தக சோழன் ஆவார். ஏதோ சில அரசியல் காரணங்களினால் ஆதித்த சோழனுக்குப் பிறகு பராந்தக சோழர் அரியணையில் அமர்த்தப்பட்டார். ஆனால் முறைப்படி பட்டத்தரசி இளங்கோபிச்சுக்கு பிறந்த கன்னர தேவரையே அரசனாக்கி இருத்தல் வேண்டும். இதனால் இவனுடைய உரிமையை ஆதரித்து இராஷ்டிரகூட அரசன் இரண்டாம் கிருஷ்ணன் சோழநாட்டின் மீது படையெடுத்தான். இப்போரில் இராஷ்ட்டிரகூட அரசுக்கு ஆதரவாக வாணர்கள் மற்றும் வைதும்பர்களும், சோழ பேரரசின் மன்னனான பராந்தகருக்கு ஆதரவாக கங்க அரசன் பிரித்திவிபதி, கொடும்பாளூர் மற்றும் கீழபழுவேட்டரயர்கள் போரில் களமிறங்கினர். மிக முக்கியமான இப்பெரும்போரில் சோழமே வென்றது.

2. சிறிது காலம் கழித்து கிபி.913ல் இரண்டாம் கிருஷ்ணன் இறந்த பிறகு இவரது பேரன் மூன்றாம் இந்திரன் இராஷ்டிரகூடத்தின் மன்னனானான், இவன் தனது மகனான நான்காம் கோவிந்தனுக்கு கிபி.918ல் இளவரசு பட்டம் சூட்டினான். இந்த இளவரசனுக்கு, பராந்தகர் தனது மகளான வீரமாதேவியை மணமுடித்ததோடு அல்லாமல் இராஷ்டிரகூடரின் நட்பை மீண்டும் மலர வைக்க முயற்சித்தார், ஆனால் அவரது விதி வேறொரு பகைமைக்கு வித்திட்டது, அதாவது அந்த சமயத்தில் கீழைச் சாளுக்கிய அரசு இரண்டு பிரிவாகி வடதிசை பகுதியை யுத்த மல்லனும், தென்திசை பகுதியை இரண்டாம் வீமனும் ஆண்டனர். அவர்கள் இருவருக்கும் பகைமை ஏற்பட்டு போர்க்களத்தில் இறங்கினர், இதில் நான்காம் கோவிந்தன் யுத்த மல்லனுக்கு ஆதரவளித்தான், ஆனால் அதில் பெருந்தோல்வியைத் தழுவினான். இதன் காரணமாக, மூன்றாம் கிருஷ்ணன் இராஷ்ட்டிரகூடத்தில் கலகம் செய்து தனது தந்தை மூன்றாம் அமோஹவர்ஷணனை (நான்காம் கோவிந்தனின் சிறிய சிற்றப்பா) இராஷ்டிரகூடத்தின் அரசராக்கினான். இதனால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நான்காம் கோவிந்தன் தன் மாமனான பராந்தகரை சரணடைந்தான். (**இந்த நான்காம் கோவிந்தன் தனது பெரிய சிற்றப்பா இரண்டாம் அமோகவர்ஷனை கொன்று அரியணை ஏறினான் என்று கூறப்படுகிறது). இதே சமயத்தில் மூன்றாம் கிரிஷ்னன் கங்கநாட்டில் ரசமல்லனை கொன்று இரண்டாம் பூதுகனை கங்க அரசின் மன்னனாக்கி, தனது தமக்கையை பூதுகனுக்கு மனம் முடித்து நட்பு பேணினான். இதனால் கங்க அரசன் பூதுகன், மூன்றாம் கிருஷ்ணனுக்கு மிகுந்த விசுவாசமாக இருந்தான்.

3. தனது மருமகனை நாட்டை விட்டு துரத்தியதால் கடும் கோபத்தில் இருந்த பராந்தகர், மூன்றாம் கிருஷ்ணனுக்கு எதிராகவும், தன் மருமகன் நான்காம் கோவிந்தனுக்கு ஆதரவாகவும் யுத்தகளத்தில் குதித்தார். மூன்றாம் கிரிஷ்னனுக்கு ஆதரவாக கங்க மன்னன் பூதுகன் இருந்ததால், மிகப்பெரிய இப்போரில் சோழர்கள் பலத்த தோல்வி அடைந்தனர். இதன் பின் மூன்றாம் கிருஷ்ணன் இராஷ்டிரகூடத்தின் பேரரசனானான், அதன் பிறகு இவன் கன்னர தேவன் என்றே அழைக்கப்பட்டான் (***இவரும், ஆதித்தன்-இளங்கோப்பிச்சி மகன் கன்னர தேவனும் வெவ்வேறுவர் ஆனால் சொந்தங்களாவர்). இருப்பினும் இவன் தன் அரசுரிமையை எதிர்த்த சோழர்கள் மீது மிகுந்த வஞ்சம் கொண்டான்.
இந்த வஞ்சத்தை மனதில் கனித்துக்கொண்ட பராந்தகன் எந்த நேரத்திலும் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது போர் தொடுக்கலாம் என்பதை அறிந்து தனது வட எல்லையை பலப்படுத்துவதில் தீவிரம் காட்டினார். ஏற்கனேவே கிபி.936ல் வடதிசை காவல் பொறுப்பை தனது மூத்த மகன் மற்றும் பட்டத்து இளவரசனான இராஜாதித்தனிடம் ஒப்படைதிருந்த பராந்தகர், காவலை இரட்டிப்பாக்கினார். இந்த காலகட்டத்தில் இராஜாதித்தர் தற்போது விழுப்புரத்தில் உள்ள திருநாவலூர் என்ற ஊரை தலைமையிடமாக கொண்டு தன் படையுடன் முகாமிட்டிருந்தார்.
இவருடன் இவரின் படைத்தலைவன் சேரநாட்டு நந்திக்கரைப் புத்தூரை சேர்ந்த வெள்ளன்குமரன் (***சேரநாட்டு மன்னனாக அறியப்படுகிறது) மற்றும் பராந்தகரின் மகன்களும், இராஜாதித்தனின் தம்பிகளுமான கண்டராதித்தரும் , அரிஞ்சய சோழனும்(இராஜராஜ சோழனின் பாட்டனார்) உடன் இருந்தனர்.

4. கிபி. 949ல் இராஷ்டிரகூட அரசன் தன் படைகளை பன்மடங்கு பெருக்கியதோடல்லாமல், தனது மைத்துனான கங்க அரசன் பூதுகனையும், முன்னாளில் பராந்தக சோழனால் நாட்டை இழந்த வைதும்ப மற்றும் பாணர் படைகளையும் ஒன்று சேர்த்து பெரும்படையுடன் தொண்டை நாட்டின் வட எல்லையை அடைந்தான். இந்தப் போரினை ஏற்கனவே எதிர்பார்த்து காத்திருந்த இராஜாதித்தன் தன் பெரும்படையுடன் எதிரிப்படைகளை தக்கோலம் என்னும் சந்தித்தான். (*தற்போது தக்கோலம் என்னும் ஊர், இப்போதுள்ள அரக்கோணத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது) இரு தரப்பினருக்கும் இடையே கடும் போர் நடந்தது , ஆயிரக்கணக்கில் வீரர்கள் மாண்டனர். இப்போரில் யாருக்கு வெற்றி என்று கணக்கிட முடியாத அளவுக்கு இரு தரப்பினனரும் போர் புரிந்தனர். கிருஷ்ணனின் படை வீரர்கள் எண்ணிக்கையின் அதிகம் இருந்த போதிலும் சோழ வீரர்கள் ஒவ்வொருவரும் அஞ்சா நெஞ்சாய் அவர்களை வெட்டி வீழ்த்தி முன்னேறினர். மற்றொரு புறத்தில் இராஜாதித்தனுடைய வாலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் எதிரிப் படைகள் சின்னாபின்னமாகின. இராஜாதித்தன் இப்போரில் தனது அனைத்து படை கருவிகளையும் உபயோகித்து போரிட்டான், அவனை நெருங்க முடியாமல் எதிரிப் படைகள் பதைபதைத்தனர். அவனது தம்பிமார்களும், படைத்தலைவனும் நாலாபுறமும் சுழன்று எதிரிகளை வெட்டி வீழ்த்தி பிணக்குவியல்களாக்கினர். இந்த நேரத்தில் கங்க மன்னன் பூதுகன், போரின் நிலையை உணர்ந்து தனது படைகளுக்கு ராஜாதித்தனை மட்டும் குறி வைக்கும்படியும், தனது படைத்தலைவனில் ஒருவனான மன்லரதா என்பவனை அழைத்து இராஜாதித்தரையும் சோழ படையையும் பிரிக்குமாறு கட்டளையிட்டான். மன்லரதா தனது மன்னர் கட்டளை ஏற்று சோழ படைகளை திசை திருப்பி, இராஜாதித்தரை தனிமை படுத்தி கங்க மன்னனும் அவரது படைகளும், இராஜாதித்தர் இருக்கும் இடத்திற்கு எதுவாக செல்ல வழிவகை செய்தான். பூதுகன் இராஜாதித்தரை நோக்கி முன்னேறி, தன்னிடம் இருந்த அம்புகளை சரமாரியாக ராஜாதித்தனை நோக்கி தொடுத்தான். இதனை சற்றும் எதிர்பாராத இராஜாதித்தர் நிலை தடுமாறி தடுக்க முயன்றார், அதில் ஒரு அம்பு இராஜாதித்தன் மார்பின் தைக்கவே அவன் அந்தக் கணத்திலேயே உயிரிழந்தான். தலைவன் இல்லாத படைகள் குழப்பத்திற்கு உள்ளான தருணத்தை பயன்படுத்தி மூன்றாம் கிருஷ்ணன் எளிதில் வெற்றி வாகை சூடினார்.

கல்வெட்டு :

  • “இராஜாதித்தன் வீற்றிருந்த யானையின் அம்பாரியை தன் போர்க்களமாக்கி, பூதுகன் அவனை விண்ணுலகேற்றினான்” என்று பெங்களூர் ஆதக்கூர் கல்வெட்டு தெரிவிக்கின்றன.
  • சோழர்களின் செப்பேடுகளிலும் ராஜாதித்தனை “யானை மேல் துஞ்சிய தேவர்” என்றே அழைக்கின்றனர். இதன் மூலம் இராஜாதித்தனை பூதுகனே கொன்றிருக்கவேண்டும் என்று உறுதியாகிறது .

    இந்த போருக்குப் பிறகு தன் பட்டத்து இளவரசனை இழந்து சோழ நாடு முழுவதும் இருள் சூழ்ந்தது.தொண்டை மண்டலம் முழுமையும் (நெல்லூரும் அடக்கம்) மூன்றாம் கிருஷ்ணனுக்கு அடிமையானது. இந்த வெற்றியின் பேரால் இவனை இவனது கல்வெட்டுகள் “கட்சியும் தஞ்சையும் கொண்ட கன்னட தேவன்” எனப் புகழ்கிறது, மற்றும் இவன் ஈழத்தையும், பாண்டிய நாட்டையும் கைப்பற்றியதாகவும், இராமேஸ்வரத்தில் வெற்றி தூண் நிறுவியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவன் காஞ்சியை மட்டுமே கைப்பற்றியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் திருவதிகைக்கு தெற்கே சோழர்களின் கல்வெட்டு தவிர, இவரது மற்றும் இராஷ்டிர கூடர்களின் எந்த கல்வெட்டுகளும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

  • ஆதக்கூர் கல்வெட்டு, செல்லேஸ்வர கோவில், மாண்டியா, கர்நாடகா
  • பூதுகன் இராஜாதித்தரையும் சோழத்தையும் வெற்றி கொண்டதை தனது நாட்டின் கோவிலில் உள்ள தூணில் செதுக்கிய காட்சி | அரகேஸ்வர கோவில், ஹோல்ஆலூர், சமரஜ நகர் மாவட்டம், கர்நாடகா
  • தக்கோலம் கோவிலில் உள்ள பராந்தகர் மற்றும் கன்னர தேவனின் கல்வெட்டுகள்

தக்கோல போரின் முக்கிய காரணங்கள்:
1. ஆதித்தனின் பட்டத்தரசி இளங்கோபிச்சுவின் புதல்வன் முதலாம் கன்னர தேவனுக்கு ஆட்சி மறுக்கப்பட்டது.
2. பராந்தகன் தன்னுடைய மகளை நான்காம் கோவிந்தனுக்கு மணமுடித்ததல்லாமல் இராஷ்டிரகூட உள்நாட்டுப் பிரச்சினையில் மூன்றாம் கிருஷ்ணனுக்கு எதிராக போர் புரிந்தது
3. பூதுகனுக்கும் மூன்றாம் கிருஷ்ணனுக்கும் மண உறவு ஏற்பட்டது, , அதனால் பூதுகன் சோளத்தை எதிர்த்தது
4. பராந்தகன் தன் ஆட்சியில் தன் அண்டை நாடான பாண்டியர், ஈழம், வாணர்கள், வைதும்பர்கள் மற்றும் கீழை சாளுக்கியம் ஆகிவற்றை வென்று அவர்கள் அனைவரையும் எதிரிகளாக்கியது. இதனால் தக்கோல பெரும்போரில் இவர்கள் எவரும் அவனுக்கு உதவ வரவில்லை.

பின்குறிப்பு : இப்போது உள்ள “வீராணம்” ஏரி (வீர நாராயணன் ஏரி) இராஜாதித்தனால் வெறும் மனித சக்தியினை கொண்டு வெட்டப்பட்டு, இவரது தந்தை பராந்தகரில் பெயரான “வீர நாராயணம்” என்று பெயர் சூட்ட பட்டது. இதன் நீளம் 14கி மீ , இதுவே தமிழ்நாட்டில் மிக பெரிய ஏரி ஆகும். இந்த ஏரி உள்ளவரை இவன் புகழ் நிலைக்கும்.

சோழ பரம்பரை

Posted in Chola by Karthikeyan Sivanantham on October 1, 2018

கண்டராதித்தர் – செம்பியன் மாதேவி

கண்டராதித்தர் தம்பி – அரிஞ்சய சோழன் (ஓராண்டுக்குள் தான் ஆண்டிருக்கிறார்)

அரிஞ்சய சோழன் மகன் – சுந்தர சோழன் (20 வயதில் அரசனாகியுள்ளார்)

சுந்தரசோழன் பிள்ளைகள்
1) ஆதித்த கரிகாலர்
2) குந்தவை
3) அருண்மொழி

கண்டராதித்தர் – செம்பியன் மாதேவி
மகன் – சேந்தன் அமுதன் – மதுராந்தகன்

ஆதித்த கரிகாலரின் கொலை

Posted in தமிழ், Chola by Karthikeyan Sivanantham on October 1, 2018
சோழர் வரலாற்றில் மர்மங்கள் நிறைந்த பகுதியாக பலராலும் கருதப்படுவது ஆதித்த கரிகாலரின் கொலை. அதற்கான காரணங்கள் பின்னிருந்த காரணகர்த்தாக்கள் பற்றி இதுவரை முழுதும் ஆதாரப்பூர்வமாக அறிய முடியவில்லை. காட்டுமன்னார்கோவில் கல்வெட்டு ஒன்றுதான் கொலைக்கு காரணமானவர்களாக ஒரு சில துரோகிகள் குறித்து சில குறிப்புகளைக் கொண்டுள்ளது.